Sunday, August 23, 2009

பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள்

பாம்புக்கடி - NEGLECTED TROPICAL DISEASE என்னும் பதிவிற்கு மருத்துவர் RENUKA SRINIVASAN (UNIVERSITY OF EAST LONDON ) அவர்கள் எழுதிய மறுமொழியுடன் கூடிய உதவிக்குறிப்பு இங்கு பகிர்தலுக்காக பதிவாக்கப்பட்டுள்ளது.


பயனுள்ள படைப்பு. இத்துடன் பாம்பு கடிக்காமல் எம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதையும் இணைத்துள்ளேன்.


1. பாம்புகள் கூடுதலாக இனம் காணப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கால்களை மூடக்கூடிய பாதணிகளையும் (Shoes and Boots) நீண்ட உடையையும் (long pants) அணிவதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம் .


2. பாம்புகள் வழக்கமாக வசிக்கும் இடங்கள், அவை வெளி வரும் நேரங்கள், நச்சுத் தன்மை கூடிய பாம்புகளையும் நச்சுத் தன்மையற்ற பாம்புகளையும் இனம் காணும் அறிவை வளர்த்துக் கொள்ளல்.


3. கண்களால் பார்க்க முடியாத இடங்களுள் (கற்குகைகள், புதர்கள் மரப்பொந்துகள்) விரல்களையோ கைகளையோ உள்ளே நுழைப்பதைத் தவிர்க்க வேண்டும் (விசேடமாக சிறுவர்கள்).


4. இரவுகளில் வெளியே செல்வதாயின் வெளிச்சத்தை தரக்கூடிய விளக்கு/ torch யினை எடுத்துச் செல்லவேண்டும்.


5. இரவில் செல்வதாயின் தடியொன்றின் மூலம் நிலத்தில் தட்டுவதன் மூலம் ஏற்படும் அதிர்வினால் பாதையில் இருக்கும் பாம்பு விலகிச் செல்ல வாய்ப்புண்டு.


6. பாம்பைக் கண்டால் அடிப்பதையோ விளையாடுவதையோ கற்களால் எறிவதையோ தவிர்த்து விலகிச் செல்வது நல்லது.


7. இறந்து கிடக்கும் பாம்புகளிடமிருந்து கூட விஷம் பரவக் கூடிய சாத்தியமிருப்பதால் அவற்றைக் கைகளில் எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளவும்.


8. உயிரினம் அடையாளம் காணப்படாத எந்தக் கடியாக (unknown bite) இருப்பினும் அலட்சியம் செய்யாது வைத்தியசாலையைச் சென்றடையவும்.


9. பாம்புகள் கூடுதலாக இனம் காணப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள்
இரவில் உறங்க முன் படுக்கைகளைப் பரிசோதிப்பதுடன்
நித்திரையின் போது ஏதாவது கடித்த அல்லது குற்றியதாக குழந்தைகள் கூறும் போது உடன் கவனம் எடுக்கவும்.


10. MSF விடுதியொன்றில் நான் கண்ட பாம்பு வராமல் தடுக்கும் மிகவும் எளிய முறையொன்றையும் எழுதுகிறேன். வீட்டையும் வளவையும் சுற்றி வரவுள்ள நான்கு மூலைகளிலும் மரக்கட்டைகளை அடித்து அவற்றில் கராஜ்களில் கிடைக்கும் கழிவு எண்ணெயில் தோய்த்த கயிற்றினை நிலமட்டத்துடன் சதுரமாக கட்டுவதன் மூலம் வீடுகளினுள் பாம்புகள் வராமல் தடுக்கலாம். கழிவு எண்ணெயின் மணம் குறையும் போது கயிறுகள் மாற்றப்பட வேண்டும் (ஆறு மாதங்கள்).


இவற்றை படிப்பறிவில்லாத பாமர மக்களிற்கு எப்படிச் சென்றடைய வைப்பீர்கள்?
Dr.RENUKA SRINIVASAN



எமது பிரதேசத்தின் பெரும்பாலான தமிழ் ஊர்களில் நீண்ட நாட்களின் பின்னர் மக்கள் குடியமர்ந்துள்ளதால் அங்கு பாம்புக்கடிக்குள்ளாகுவோர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.


எனவே அப்பகுதிகளைச் சேர்ந்த உயர்கல்விகற்ற மாணவர்களுக்கு இவை மருத்துவ கையேடுகளாக வழங்கப்பட்டு சாதாரணமக்களைச் சென்றடையச் செய்யப்பட உள்ளது.

தங்களது ஜீவநதிக்கான தொடர்ச்சியான பங்களிப்புக்கு மிக்க நன்றிகள்.







Bookmark and Share

Tuesday, August 4, 2009

மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம்

உயர் குருதியமுக்கம், மாரடைப்பு, பாரிசவாதம் என்பன அதிகளவிலான மரணங்களை ஏற்படுத்துகின்ற காரணிகளாக இருக்கின்றன.


இருதயம் எமது உடலிற்குத் தேவையான குருதியை உடல் முழுக்கச் செலுத்துகின்றது. இருதயம் தனக்குத்தேவையான பிராணவாயுவையும், சக்தியையும் இரத்தக் குழாய்களின் மூலம் பெறுகிறது.



இவ் இரத்தக் குழாய்களில் படிப்படியாக கொழுப்பு சிறுவயதிலேயே படிய ஆரம்பித்துவிடும். இவ்வாறு கொழுப்பு படிவதால் இரத்தோட்டம் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தடைப்படும். இதனால் இருதயம் வேகமாக வேலைசெய்ய வேண்டி இருக்கும் போது அதற்கு மேலதிகமாக தேவைப்படும் பிராண வாயுவும், சக்தியும் கிடையாததால் மார்பு வலி ஏற்படும்.

(படத்தில் இதயவறைச் சுவர், கொழுப்பு படிந்த குழாய்களில் குருதி கட்டிபடுவதால் அக்குருதிக்குளாய் மூலம் பிராண வாயுவையும், சக்தியையும் பெறும் பகுதி முதிலில் பாதிக்கப்படுவதையும் ( Ischemia) பின்னர் அது சேதமாவதையும் (Injury) இறுதியாக இறந்து விடுவதையும் (Infarction) காண்கிறீர்கள்)



கொழுப்பு படிந்த குழாய்களில் குருதி கட்டிபடுவதால் அக்குருதிக்குளாய் மூலம் பிராண வாயுவையும், சக்தியையும் பெறும் பகுதி இறக்கும். இதுவே மாரடைப்பு எனப்படும்.




முழுமையாக அடைப்பு ஏற்படின் திடீர் மரணம் ஏற்படலாம். இதே போல் மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் பாரிசவாதம் ஏற்படும்.



எமது அனைவரின் குருதியிலும் கொழுப்புகள் காணப்படுகின்றது. இவை குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக ஒரு சிலரின் குருதியில் காணப்படும். இது HYPER LIPIDAEMIA என அழைக்கப்படும்.


இதனைத் தவிர்க்க உங்கள் குருதியிலுள்ள கொழுப்பின் அளவை வருடத்திற்கு ஒரு தடவையேனும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.


குருதியில் கொழுப்பு அதிகஅளவில் காணப்படின் உணவில் கீழ் கூறப்படும் மாற்றங்களை ஏற்படுத்துவதாலும், தேக அப்பியாசத்தின் மூலமும் குருதியிலுள்ள கொழுப்பைக் குறைக்கலாம். இரண்டிற்கும் குருதியிலுள்ள கொழுப்பு குறையாவிடின் வில்லைகளைத் தொடர்ந்து பாவித்து இதனைக் குறைக்க வேண்டும்.



நீங்கள் அதிகஅளவு கொழுப்பு எண்ணையை உணவில் சேர்த்தால் அது உங்கள் இரத்தக்குளாய்களில் படிந்து இருதயத்துக்கு இரத்தம் செல்வதைத் தடுக்கும்.


இதனைத் தவிர்க்க



மிகக் குறைந்த அளவு மிருகக் கொழுப்பை உண்ணவும்/ தவிர்க்கவும்.


பொரித்த உணவுகளை உண்பதைக் குறைக்கவும்.


நெய், தேங்காய்ப்பால், CHEESE, BUTTER, MARGARINE, சிவப்பு இறைச்சி, ஊறுகாய், அச்சாறு, முட்டை மஞ்சள் கரு, ஈரல், மூளை ஆகியவற்றை உண்ணபதைக் குறைக்க வேண்டும்.


ஆடைநீக்கிய பால்மா (NON FAT) பாவியுங்கள்.


மீன் தேவையான அளவு உண்ணலாம்.


கூடியளவில் நார்த்தன்மையான உணவை உண்ணுங்கள்.
உதாரணம் பழங்கள், இலைக்கறிவகைகள், அவரையினம், கோவா, தானியங்கள்.



கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம்






Bookmark and Share

Wednesday, July 1, 2009

அபாய அறிகுறிகள் -டெங்குக் காய்ச்சல்/DENGUE FEVER

டெங்குக் காய்ச்சல் நுளம்பினால் பரப்பப்படும் ஒரு நோய். இந்நோய்பற்றிய சில தகவல்கள்.


டெங்கு நோயின் பாதிப்புக்கள்



டெங்கு நோயின் சாதாரண அடையாளங்கள்



@ கடும் காய்ச்சல்


@ தலைவலி

@ வாந்தி

@ உடல்வலி

@ வயிற்றுளைச்சல்

சாதாரணமாக 3 அல்லது 4 தினங்களின் பின் நோய்குணமாகிவிடும். எனினும் சிலருக்கு டெங்குக் குருதிப்பெருக்கு நோய் ஏற்படக்கூடும்.


டெங்குக் குருதிப்பெருக்கு நோயின் அறிகுறிகள்

@ தோலின் அடியில் சிறிய சிகப்பு அடையாளம் தோன்றுதல்


@ கண்கள் சிகப்பு நிறமாதல்


@ முரசினால்,மூக்கினால் இரத்தம் கசிதல்

@ மல, சலத்துடன் இரத்தம் வெளியேறுதல்

@ கடுமையான வயிற்று நோ

@ வாந்தி , மலம் கறுப்பு நிறமாதல்

இவை அபாய அறிகுறிகளாகும். இதனுடன் டெங்கு அதிர்ச்சி நிலையைக்குறிக்கும்

@ உடல் வெளிறல்

@ உடம்பு குளிர்ந்து போதல்

@ கலக்கமான, தூக்கமான நிலை

@ மூச்சுத்திணறல்


இவ்வாறான நோய் அடையாளங்கள் உள்ள நோயாளிகளுக்கு உடனடியாக வைத்தியசாலைச் சிகிச்சை அவசியமானதாகும்.


நாம் என்ன செய்ய வேண்டும்

@நோய் பரப்பும் நூளம்புகளைக் கட்டுப்படுத்தல்

@நோயாளிக்கு போதிய ஓய்வு கொடுத்தல் - விசேடமாக பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாமல் ஓய்வெடுக்கச் செய்தல்

@அதிகளவில் நீராகாரம் அருந்துதல்
கொதித்தாறிய நீர்
சோற்றுக்கஞ்சி
சூப்
பழரசம்..

@சிகப்பு, கறுப்பு நிற ஆகாரங்களைத் தவிர்த்தல்

@'அஸ்பரின்' வகை மருந்துகளைத் தவிர்த்தல்

@பரசிற்றமோல் சரியான அளவில் கொடுத்தல்


டெங்குக் காய்ச்சல் பற்றி சந்தேகம் ஏற்பட்டால் உடனே வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுதல்.

படங்கள் - நன்றி இணையம்